மும்பை: காப்புறுதித் தொகையைப் பெற மனநிலை சரியில்லாத ஒருவரைக் கொன்றுவிட்டு, தாமே இறந்துவிட்டதுபோல் நாடகமாடிய 54 வயது ஆடவரையும் அவரின் கூட்டாளிகள் நால்வரையும் மகாராஷ்டிர மாநிலக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த பிரபாகர் வாக்சோரே என்ற அந்த ஆடவர், அங்கு ஒரு காப்புறுதி நிறுவனத்தில் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆயுள் காப்புறுதி எடுத்திருந்தார்.
இவ்வாண்டு ஜனவரியில் இந்தியா திரும்பிய பிரபாகர், அகமதுநகர் மாவட்டத்தில் இருக்கும் தம் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து காப்புறுதிப் பணத்தைப் பெற அவர் திட்டம் தீட்டினார். தமக்கு உடந்தையாக வேறு நால்வரையும் சேர்த்துக்கொண்டவர், அவர்களுக்குப் பணம் தருவதாகவும் உறுதியளித்தார்.
"பின்னர் அருகிலுள்ள ராஜூர் எனும் ஊரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த பிரபாகர், அங்கு வசிக்கத் தொடங்கினார். அவரும் அவரின் நான்கு கூட்டாளிகளும் ஒரு நச்சுப் பாம்பை வாங்கி, அதனைக் கொண்டு மனநிலை சரியில்லாத 50 வயது ஆடவரைத் தீண்டச் செய்தனர். அந்த ஆடவர் இறந்ததும் உடனடியாக அவரை ஒரு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அவரது பெயரை பிரபாகர் வாக்சோரே எனப் பதிவுசெய்தனர்," என்று விவரித்தார் அகமதுநகர் காவல்துறைக் கண்காணிப்பாளர் மனோஜ் பாட்டீல்.
பாம்பு தீண்டி இறந்தவர் அமெரிக்காவில் இருந்து வந்து, தம் குடும்பத்தாருடன் ராஜூரில் தங்கியிருந்தார் என்றும் அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்தனர்.
"பின்னர் இறப்புச் சான்றிதழையும் பிற சட்டபூர்வ ஆவணங்களையும் பெற்று, அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த பிரபாகரின் மகன் காப்புறுதித் தொகை கோரி விண்ணப்பித்தார். இதனிடையே, இந்தியாவில் பிரபாகரும் அவரின் கூட்டாளிகளும் இறந்தவர்க்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனர்," என்று பாட்டீல் தெரிவித்தார்.
ஆனால், பிரபாகர் ஏற்கெனவே ஏமாற்ற முயன்றதால் அமெரிக்கக் காப்புறுதி நிறுவனத்திற்கு ஐயம் எழுந்தது.
அதனால், பிரபாகரின் மரணத்தை உறுதிசெய்ய இந்தியாவிற்கு அது புலனாய்வாளர்களை அனுப்பியது. பிரபாகர் உயிருடன் இருப்பது தெரியவர, உடனடியாக அவர்கள் காவல்துறையை அணுகினர். காவல்துறை விசாரணையில் பிரபாகரின் சதி அம்பலமானது.

