செய்திக்கொத்து

3 mins read
80bb3490-a5fb-4476-9b7f-dda800c7d194
-

டிசம்பருக்குள் அனைவரும் ஒரு

தடுப்பூசியாவது போடவேண்டும்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி குறித்து, மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆகியோர் இணையம் வழி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவரும் ஒரு தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தடுப்பூசி போடத் தொடங்கிய 2021 ஜனவரி 16ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை இதுவரை 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளிப் பண்டிகைக்குப் பின்னர் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தொற்றின் மூன்றாவது அலை எழும்பக்கூடும் என்று சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

4.2 என்னும் புதுவகை உருமாறிய கொரோனா தொற்று உலகமெங்கும் பரவி வருகிறது. அதிவேகமாகப் பரவக்கூடிய இந்தத் தொற்று அதிக மரணத்தை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இதுபோன்ற கிருமிகள் பரவுவதற்குள்ளும் மூன்றாவது தொற்று அலைக்குள் சிக்குவதற்குள்ளும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்று கூறப்படுகிறது.

டெல்லி: 50% மாணவர்களுடன்

அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

புதுடெல்லி: டெல்லியில் இப்போது உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் நவம்பர் மாதத்தில் இருந்து திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வரலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஏனெனில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அதிகபட்சமாக 50 விழுக்காட்டு மாணவர்கள் ஒரே நேரத்தில் நேரடி வகுப்புகளில் அனுமதிக்கப்படுவர். அதேவேளையில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரசில்

இணைந்த பாஜக எம்எல்ஏ

கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்மையில் விலகிய சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண கல்யாணி நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கோல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி முன்னிலையில் அவர் தன்னை திரிணாமுல் காங்கிரசில் இணைத்துக்கொண்டார். அவரை கட்சி நிர்வாகிகள் வாழ்த்தி வரவேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் தேவஸ்ரீ சவுத்ரிக்கு எதிராகப் பேசியதால் கிருஷ்ண கல்யாணிக்கு பாஜக தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த கிருஷ்ண கல்யாணி, அக்கட்சியில் இருந்து விலகினார்.

நீர்மூழ்கிக் கப்பல் ரகசியம் கசிவு;

கடற்படை அதிகாரிகள் கைது

மும்பை: நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டது தொடர்பாக கடற்படை அதிகாரி மற்றும் முன்னாள் அதிகாரிகள் இருவர் உள்பட 5 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவிடம் இருந்து அண்மையில் கைலோ ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்தியா வாங்கியது. இப்போது அதை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அக்கப்பல் குறித்த ரகசியங்கள் கசிந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், தற்போது பணியில் இருக்கும் கடற்படைத் தளபதி, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் இருவர் உள்பட ஐந்து பேரை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, டெல்லி, மும்பை, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்பட 19 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியதில், மின்னியல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.