உச்ச நீதிமன்றம்: தேசிய பாதுகாப்பு எனக்கூறி மத்திய அரசு தப்பிக்க முடியாது
புதுடெல்லி: பெகாசஸ் மென்பொருள் வழியாக நாட்டின் முக்கியத் தலைவர்கள், செய்தியாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் கைத்தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்த புகாரை விசாரிக்க சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் முன்னூறுக்கும் மேற்பட்டோரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை அமைக்கும்படி கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது.
இந்த ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி அமர்வு, நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், பெகாசஸ் விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக்கியமானவை.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மக்களின் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவது என்பது அவர்களின் தனிமனித உரிமைக்குப் பங்கம் விளைவிப்பதாகும். அதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
"தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமான ஒன்றுதான். அதைப்போலவே தனிமனித உரிமை மிக முக்கியமானது.
"நாட்டு மக்களின் ரகசியத்தை காப்பது முக்கியம்.
"வழக்குத் தொடர்ந்த மனுதாரர்களில் சிலர் கைத்தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டதால் அவர்கள் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
"தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குடிமக்களின் அந்தரங்க உரிமைக்கு வயது வரம்பு விதிக்க முடியும்.
"அந்தரங்க உரிமைக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறுவதாக இருக்கக் கூடாது," என்று நீதிபதிகள் கூறினார்.
மேலும், "ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் ஒன்றிய அரசுக்கு போதிய அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்.கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, தங்கள் செயலை நியாயப்படுத்தவோ முடியாது," என்று கூறிய நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட சிறப்பு வல்லுநர் குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டனர்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் 3 பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தும்.
இணைய குற்றத் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் உளவுத்துறை தலைவர் அலோக் ஜோஷி, இணைய பாதுகாப்பு மற்றும் மின்னியல் தடயவியல் வல்லுநராக நவீன் குமார் சவுத்ரி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஓபராய் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிறப்புக் குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும். விசாரணை குறித்த அறிக்கையை எட்டு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

