புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ராகுல், பிரியங்கா, மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆகியவற்றின் பொய் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும். அவர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமெனில் நம் கட்சிக்காரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து கட்சியின் தலைமை நாள்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இருப்பினும் இந்த அறிக்கைகள் யாவும் கடைநிலைத் தொண்டர்களைச் சென்றடைகிறதா என்பது கேள்விக்குறிதான்.
காங்கிரசின் மூத்த தலைவர்களிடம் முதலில் ஒற்றுமை என்பது இல்லவே இல்லை என்பதை என்னால் தெளிவாக உணர முடிகிறது.
காங்கிரசின் உயரிய கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
கடந்த காலங்களில் அநீதி, சமத்துவமின்மைக்கு எதிராக போராடி காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு போராட வேண்டும்.
நாட்டின் அரசமைப்புச் சாசனங்களை நரேந்திர மோடி அரசு படிப்படியாக அழித்து வருகிறது.
இதனால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிறது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ்காரர்கள் போராட வேண்டும். அடுத்த சில மாதங்களில் ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இப்போதே தங்களைத் தயார் செய்ய வேண்டும்.

