புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருக்கும் பட்சத்தில் முப்பது லட்சம் மக்களுக்குப் பேரழிவு ஏற்படும் என கேரளா கூறியுள்ளது.
126 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த அணையானது நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதியில் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ள கேரள அரசு, அணை இன்னும் பாதுகாப்பற்ற நிலையில்தான் உள்ளது என தெரிவித்துள்ளது.
"முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது. திடீரென நீர்வரத்து அதிகமானால் ஆபத்து ஏற்படும். எனவே நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்டும்.
"அணை நீர்மட்டம் தற்போது 137 அடி இருக்கும் போது 2735 கனஅடி வரையிலான நீரை தமிழ்நாடு பயன்படுத்தலாம். ஆனால் தமிழ்நாடு 2200 கனஅடி வரை மட்டுமே பயன்படுத்துகிறது," என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணை கட்டப்படும் போது பல அறிவியல் பூர்வமான விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அணை கண்காணிப்புக் குழுவும் தமிழ்நாடு அரசும் இதை கவனத்தில் கொள்ள மறுப்பதாகவும் கேரளா கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீடித்து வருகிறது.

