செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
88f6949e-7311-4f1f-bb28-6327e023468a
-

பீகார் குண்டு வெடிப்புச் சம்பவம்: ஒன்பது பேர் குற்றவாளி என அறிவிப்பு

பாட்னா: ஆறு பேரை பலிகொண்ட பீகார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேரை குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பிரதமர் மோடி பங்கேற்ற பிரசாரக் கூட்டம் பாட்னாவில் உள்ள திடலில் நடைபெற்றது. கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ஆறு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் ஆறு பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில், ஒன்பது பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நேற்று முன்தினம் அறிவித்தார். நவம்பர் 1ஆம் தேதி இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

முந்நூறாயிரம் வழக்குகளை திரும்பப் பெற உத்தரப் பிரதேச அரசு முடிவு

லக்னோ: கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பாக பதிவாகி உள்ள சுமார் முந்நூறாயிரம் வழக்குகளைத் திரும்பப் பெறுவது என உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்குகள் அனத்தும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பதிவாகி உள்ளன. எனினும் முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை மட்டும் திரும்பப் பெறப் போவதில்லை என்றும் இதர குற்ற பத்திரிகைகள் அனைத்தும் கைவிடப்படும் என்றும் அரசுத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் வெற்றி: கொண்டாடினால் தேசத் துரோக வழக்கு பாயும்

லக்னோ: உலகக் கிண்ண 'டி-20' கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடுவோர் மீது தேசத் துரோக வழக்கு பாயும் என்று உத்தரப் பிரதேச அரசு எச்சரித்துள்ளது. இத்தகைய போக்கை அனுமதிக்க இயலாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக சமூக விரோதிகள் சிலர் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது என்று உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. தேச விரோத கருத்துகள் பரப்பப்படுவதாகவும், இது தொடர்பாக ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் உத்தரப் பிரதேச காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சட்ட சீர்திருத்த பணிக்குழுவில் தமிழர்களுக்கு இடமில்லை

புதுடெல்லி: இலங்கை அரசாங்கம் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் அமைக்கப்படுள்ள பணிக்குழுவுக்கு சர்ச்சைக்குரிய புத்த மதத் துறவி கலகோட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 13 பேர் கொண்ட அந்தக் குழுவில் ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை. மேலும், இஸ்லாமியர்களுக்கும் பெண்களுக்கும் இடமளிக்கப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்றம்: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை

புதுடெல்லி: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவை வெளியிடத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு மாணவர்கள் மறு தேர்வு நடத்தக் கோரி முறையிட்டுள்ளனர். இந்நிலையில், இருவருக்காக 16 லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகளை தாமதப்படுத்த முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.