சென்னை: மருந்து உற்பத்தி சார்ந்த தொழில்களில் இந்திய அரசு ஊக்குவிக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மருந்துத் தொழிலின் மையமாக இந்தியாவை மாற்ற அனைத்துலக முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மருந்து, மருத்துவ சாதனத் தயாரிப்பு தொடர்பான மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவில் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளைக் கட்டமைக்கும் நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்றார்.
"முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய சொந்த நாடுகளில் இருப்பதைப் போல் பாதுகாப்பான முதலீட்டு சூழலை இந்தியாவும் வழங்கும். நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
"இதைப் பயன்படுத்திக் கொண்டால் உலக மருந்து தொழில் நிறுவனங்கள் பலனடையலாம்.
இந்தியாவில் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் சமமாகவே நடத்தப்படுவர்," என்றார் அமைச்சர் மன்சுக் மாண்டவியா.
உலகளாவிய மருந்துத் தொழிலின் மையமாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மருத்துவ - மருந்து ஆய்வுப் பூங்காங்கள் அமைக்கப்படும் என்றார்.

