புதுடெல்லி: 12 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கான தடுப்பூசித் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பூசிக்கான விலை முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படும் நிலையில், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வந்தது.
இந்நிலையில், 'ஸைகோவ்-டி' தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இம்மருந்து தொடர்பான அனைத்து தரவுகளையும் பரிசீலித்த பின்னர் அவசரகாலப் பயன்பாட்டுக்கான ஒப்புதலை அண்மையில் வழங்கியது.
இதையடுத்து, இத்தடுப்பூசியின் விலை குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. கோவேக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை விட, ஸைகோவ்-டி தடுப்பு மருந்தின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தயாரிப்பாளர்கள் குறிப்பிட்ட விலையைவிட குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸைகோவ்-டி தடுப்பு மருந்து மூன்று கட்டங்களாக போடப்படும். புற்றுநோய், சுவாசக் கோளாறு, நரம்பியல், இதயப் பிரச்சினை, கல்லீரல் பாதிப்புள்ள சிறார்களுக்கு தடுப்பு மருந்து அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவே இந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் கொரோனா தடுப்பு மருந்தாகும்.
இதற்கிடையே, நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 77 விழுக்காட்டினருக்கு கொரோனா முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
32 விழுக்காட்டினர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளதாக அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சுமார் நூறு மில்லியனுக்கும் அதிகமானோர் பல்வேறு காரணங்களால் இரண்டாவது ஊசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கேரளாவில் நேற்று முன்தினம் புதிதாக மேலும் 9,445 பேருக்கு கிருமி தொற்றியது உறுதியானது. மேலும், 93 பேர் மாண்டுவிட்டனர்.
அம்மாநிலத்தில் இதுவரை 41 கர்ப்பிணிகள் தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் கொரோனாவின் 'ஏ.ஒய்-4.2' வகை திரிபால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து மாநில சுகாதார அமைச்சர் கே.சுதாகர், அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில், பெங்களூரில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்கள் வழி தகவல் பரவியுள்ளது.