திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவி பெற்றோருக்குத் தெரியாமல் 'யூ டியூப்' காணொளியைப் பார்த்து குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இது குறித்து மூன்று நாள்களுக்குப் பிறகே பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது.
கூட்டக்கல் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த 21 வயது இளையருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நெருங்கிப் பழகிய நிலையில், அப்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார் அந்த இளையர். இதில் மாணவி கருவுற்றார்.
பெற்றோரிடம் இதை மறைத்து வந்த மாணவி, அண்மையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் அவரது நிலையை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதற்கும் முன்னதாகவே தாமே பிரசவம் பார்த்துக்கொள்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள அவர் 'யூ டியூப்' காணொளிகளைப் பார்த்துள்ளார். பிறகு எப்படியோ குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
அதன் பின்னர் தன் வீட்டு மாடியில் தனக்குப் பிறந்த ஆண் குழந்தையை அவர் ஒளித்து வைத்ததாகத் தெரிகிறது. அடிக்கடி அவர் மாடிக்குச் செல்வதைக் கண்டு சந்தேகம் அடைந்த பெற்றோர், குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, நடந்த சம்பவங்கள் அனைத்தும் தெரியவர, மாணவியின் காதலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார்.

