மிர்ஸாபூர்: உண்ணும்போது குறும்புத்தனம் செய்ததற்காக தனியார் பள்ளி முதல்வர் ஒருவர், இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவனைப் பள்ளிக் கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கவிட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மிர்ஸாபூர் மாவட்டம், அஹ்ரௌரா நகரில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்தது.
இதுகுறித்து அறிய நேர்ந்த மாவட்டக் குற்றவியல் நீதிபதி, உடனடியாக அதுபற்றி விசாரிக்கும்படி அடிப்படைக் கல்வி அதிகாரிக்கு ஆணை பிறப்பித்தார்.
அதனுடன், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர்மீது புகார் பதிவுசெய்யவும் அவர் உத்தரவிட்டார்.
சோனு யாதவ் என்ற அந்த மாணவன் உணவுண்ணும்போது குறும்புத்தனம் செய்ததால், பள்ளி முதல்வர் மனோஜ் விஸ்வகர்மா கோபமடைந்தார்.
இதனையடுத்து, ஆத்திரத்தில் சோனுவின் ஒரு காலைப் பிடித்து, இரண்டாம் தளத்தில் இருந்து அவனைத் தலைகீழாகப் பிடித்துத் தொங்கவிட்டார். மற்ற மாணவர்களின் முன்னிலையில் அவனுக்குப் பாடம் கற்பிப்பதற்காக அவர் அப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அச்சத்தில் அலறி, இனிமேல் செய்யமாட்டேன் என்று சோனு மன்னிப்பு கேட்டபிறகே, அவனை மேலே தூக்கினார் விஸ்வகர்மா.
இச்சம்பவம் தொடர்பான படம், சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
“என் மகன் வேறு சில மாணவர்களுடன் சேர்ந்து கோல்கப்பா உண்பதற்காகச் சென்றான். அப்போது குழந்தைகள் சற்றுக் குறும்புத்தனம் செய்துள்ளனர். அதற்காக, என் மகனின் உயிருக்கு அபாயம் விளைவிக்கும் வகையில், இத்தகையதொரு தண்டனையைப் பள்ளி முதல்வர் அளித்திருக்கக் கூடாது,” என்று சோனுவின் தந்தை ரஞ்சித் யாதவ்.
இதனையடுத்து, பள்ளி முதல்வர் மனோஜ் விஸ்வகர்மாவைக் கைது செய்த காவல்துறை, அவர்மீது சிறார் நீதிச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது.