வயநாடு: இந்தியாவின் கேரள மாநில அரசு அதிகாரி ஒருவரின் ஓவியம் போன்ற கையெழுத்து சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
வயநாடு மாவட்டம், மானந்தவாடியில் வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரியும் எம்.கே.ஜெயன் என்ற அந்த அதிகாரி, தமது பள்ளிப் பருவத்தில் இருந்தே, இப்படி வண்ணத்துப்பூச்சி அல்லது இரு பறவைகள் சேர்ந்திருப்பதுபோல் கையெழுத்திடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
ஆனாலும், இதுநாள்வரை அதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளாத நிலையில், திடீரென அது பேசுபொருளாகி இருக்கிறது.
பள்ளியில் படிக்கும்போது படம் வரைவதில் திரு ஜெயனுக்கு ஆர்வம் அதிகம். ஆனாலும், அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே சிரமமாக இருக்க, அந்தப் பேரார்வத்தை இவரால் தொடர இயலவில்லை.
கோழிக்கோடு பல்கலைக்கழகக் காற்பந்து அணியின் கோல் காப்பாளராகவும் விளங்கிய இவர், நன்றாகக் கவிதையும் புனைவாராம்.
1995ஆம் ஆண்டு கேரள மாநில அரசுப் பணியில் சேர்ந்த இவர், இதுநாள்வரை ஆயிரக்கணக்கான கோப்புகளிலும் ஆவணங்களிலும் கையெழுத்திட்டும் அதிலிருக்கும் புதுமையைக் கண்டு, எவரும் பாராட்டியதில்லை.
“சிலர் அதைச் சற்று ஆர்வத்துடன் பார்த்ததைக் கண்டுள்ளேன். ஆனாலும், அதைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும் அவரவர்க்கு வேறு வேலைகள் உள்ளன,” என்றார் திரு ஜெயன்.
இம்மாதத் தொடக்கத்தில் மானந்தவாடி வட்டார ஆய்வாளரிடம் திரு ஜெயன் அளித்த ஒரு கடிதத்தில் இருந்த அவரது கையெழுத்து, எப்படியோ சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
“எந்த வழியில் அது சமூக ஊடகத்திற்குச் சென்றது என்று எனக்குத் தெரியவில்லை,” என்றார் திரு ஜெயன்.
இவரது இந்த ‘ஓவிய’ கையெழுத்துப் பழக்கம், குடும்பத்திலும் மரபாகத் தொடர்கிறது. கல்லூரியில் பயிலும் மகன் துருபத் கௌதமும் பள்ளியில் பயிலும் மௌரியா சின்மயியும் தந்தையைப் போலவே ஓவியம்போல் கையெழுத்திடுவது குறிப்பிடத்தக்கது.