இடுக்கி: முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டி உள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது.
அதன்படி நேற்றுக் காலை 7 மணியளவில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் மற்றும் கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் அணைக்குச் சென்று ஆய்வு செய்தனர். அணையைத் திறப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். முன்னதாக, 350 குடும்பங்களைச் சேர்ந்த 1,079 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.