பாட்னா: பீகாரில் இன்று (அக்டோபர் 30) நடைபெறவுள்ள இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த
தாகக் கருதப்படுகிறது. இத்தேர்தலின் முடிவு அம்மாநிலத் தலைவர்
களான நிதிஷ் குமார் (படம்), தேஜஸ்வி பிரசாத் யாதவ் போன்றோரின் அரசியல் செல்வாக்கை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் இரண்டு எம்எல்ஏக்கள் மறைவால் தாராபூர் மற்றும் குஷேஸ்வர் அஸ்தான் சட்டமன்றத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் அது நிதிஷ்குமாரின் எதிர்கால அரசியலில் பாதிப்பை உருவாக்கும். இதனால், நிதிஷ் நேரடியாகப் பிரசாரக்களத்தில் இறங்கினார். இவரது முக்கியக் கூட்டணியான பாஜகவிற்கும் இந்த இடைத்தேர்தல் கௌரவப் பிரச்சினையாக உள்ளது. பீகார் மாநில முக்கிய எதிர்த்தரப்புத் தலைவரான தேஜஸ்வி, இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது செல்வாக்கை மேலும் உயர்த்த விரும்புகிறார். எனவே இரு தொகுதிகளிலும் தனது கட்சியினரையே அவர் நிறுத்தி உள்ளார். மெகா கூட்டணியில் உள்ள காங்கிரசை அவர் கலந்துபேசாமல் முடிவெடுத்ததால் அதிலிருந்து காங்கிரஸ் வெளியேறிவிட்டது. இந்த இரு தொகுதிகளில் ஒன்றில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்டது.
243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இந்த மெகா கூட்டணிக்கு 110 இடங்களும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 126 இடங்களும் உள்ளன. முதல்வர் நிதிஷின் ஜேடியு வசம் 43 உறுப்பினர்களே உள்ளனர்.

