மும்பை: போதைப் பொருள் வழக்கு விசாரணையில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் 28 நாட்களுக்குப் பிறகு நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தந்தை ஷாருக் கானுடன் அவர் தனது இல்லமான மன்னத்திற்குச் சென்றார். அங்கு ஏராளமான ரசிகர்கள் மேள தாளங்களுடன் வரவேற்றனர்.
அவருடன் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 3ஆம் தேதி மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஆர்யன் கான் உட்பட எட்டுப் ேபரை போலிசார் கைது செய்தனர். விசாணைக்குப் பின் அனைவரும் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஷாருக் கான் தனது மகனை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்த வேளையில் அவர்களுடைய பிணை மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. பின்னர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்றது. ஷாருக் கான் தரப்பில் மூத்த வழக் கறிஞர் முகுல் ரோத்தகி முன்னிலையானார். இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட மும்பை உயர் நீதிமன்றம் 14 நிபந்தனைகளுடன் அவர்களை பிணையில் விடுவிக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஆனால் ஆவணங்கள் உரிய நேரத்தில் சிறை அதிகாரிகளுக்கு வந்து சேராததால் வெள்ளிக்கிழமை இரவும் அவர் சிறையில் வைக்கப்பட்டார். இந்நிலையில் ஆர்யன் கான் நேற்று விடுவிக்கப்பட்டார்.

