புதுடெல்லி: சர்தார் படேலால் ஊக்கம்பெற்றுள்ள இந்தியா, உள்ளேயிருந்து மற்றும் வெளியேயிருந்து வரும் சவால்களைச் சந்திக்கும் முழுத் திறன் பெற்றதாக மாறியுள்ளது. முன் எப்போதும் இல்லாத வளர்ச்சி, சிரமமான இலக்குகளை அடைந்திருப்பது, சர்தார் படேலின் கனவுகள்படி இந்தியா கட்டமைக்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி (படம்) கூறினார்.
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தேவையற்ற சட்டங்களை நீக்கியுள்ளோம். ஒற்றுமைச் சிந்தனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்துத் தொடர்பையும் அடிப்படைக் கட்டமைப்பையும் வலுப்படுத்தியுள்ளோம். அதனால் புவியியல், கலாசார ரீதியிலான தூரங்கள் குறைக்கப்பட்டு ஒன்றிணைந்துள்ளோம்.
இன்று ‘ஒரே இந்தியா, உன்னத இந்தியா’ என்ற உணர்வு வலுவடைந்திருப்பதால் சமூக, பொருளாதார, அரசியல் சட்டப்படியான ஒருங்கிணைப்பின் ‘மகா யாகம் நடந்துகொண்டிருக்கிறது. நீர், நிலம், வான், விண்வெளி ஆகியவற்றில் நாட்டின் உறுதியும் திறனும் முன் எப்போதும் இல்லாத வகையில் உள்ளது.
தற்சார்பு இந்தியா இயக்கத்தின் புதிய பாதையில் தேசம் முன்னோக்கிச் செல்லத்தொடங்கியுள்ளது. சுதந்திரத்தின் 75வது ஆண்டு சகாப்தத்தில் ‘அனைவரின் முயற்சி’ என்பது கூடுதல் பொருத்தமுடையதாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வளர்ச்சி, சிரமமான இலக்குகளை அடைந்திருப்பது, சர்தார் சாகேபின் கனவுகள்படி இந்தியாவைக் கட்டமைப்பது என்பதன் சகாப்தமாக சுதந்திரத்தின் 75வது ஆண்டு உள்ளது. சர்தார் படேலின் ஒரே இந்தியா என்பதன் பொருள் அனைவருக்கும் சம வாய்ப்புகள் என்பதாகும். ஒரே இந்தியா என்பது பெண்கள், தலித் மக்கள், நலிவடைந்தவர்கள், பழங்குடியினர், காடுகளில் வாழ்வோர் ஆகியோருக்கு சம வாய்ப்புகள் அளிக்கும் இந்தியா. எந்தவித பாகுபாடும் இல்லாமல், அனைவருக்கும் வீட்டுவசதி, மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை எளிதில் கிடைக்கச்செய்வதாகும். அனைவரும் முயற்சி செய்வோம் என்பதில் இதைத்தான் நாடு செய்துவருகிறது என்று பிரதமர் மோடி, தனது உரையில் கூறினார்.