செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
beb03316-2e06-4a16-bc48-de77a764bead
-
Google News Preferred Icon

கர்நாடக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி, ஹாவேரி மாவட்டம் ஹனகல் ஆகிய இரண்டு தொகுதிகளில் நேற்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான‌ காங்கிரஸ், மஜத ஆகியவை தனித்தனியாகப் போட்டியிட்டன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பசவராஜ் அனைத்து அமைச்சர்களையும் களத்தில் இறக்கினார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரும், மஜத வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடாவும் முன்னாள் முதல்வர் குமாரசாமியும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இரண்டு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 2ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமித்ஷா: 4 வயதிலிருந்து காயத்ரி மந்திரம் உச்சரிக்கிறேன்

உத்தரகாண்ட்: நான் நான்கு வயதில் இருந்து காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வருகிறேன். இரக்கமும் நல்ல சிந்தனையும் மனித வாழ்க்கையின் அடிப்படை உணர்வு. அறிவு, நேர்மை, துணிவு, பொறுப்பு இவை வாழ்க்கையின் ஒரு பகுதி. இவற்றையெல்லாம் எனக்குக் கற்றுக் கொடுத்ததே காயத்ரி மந்திரம்தான் என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள சாந்திகஞ் மடத்திற்குச் சென்றார் அமித்ஷா. அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

முழு கொள்ளளவை எட்டின கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள்

பெங்களூரு: நவம்பர் 2ஆம் தேதி கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் பாகினா வழிபாடு செய்யவிருக்கிறார் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பசவராஜ். கே.ஆர்.எஸ். அணையைத் தொடர்ந்து கபினி அணை தற்போது தனது முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளது. இரண்டு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நவம்பர் 2ஆம் தேதி அந்த அணைகளுக்கு நேரில் சென்று வழிபாடு நடத்த உள்ளார் முதல்வர் பசவராஜ்.

தாஜ்மகாலைக் காண அனுமதி

டேராடூன்: ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியையொட்டி மாதம் ஐந்து நாட்கள் இரவில் தாஜ்மகாலைக் காண மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது உத்தரப்பிரதேசத்தில் கிருமிப் பரவலால் நிலவிய ஊரடங்கு தளர்ந்ததன் எதிரொலியாக அமைந்துள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை இரவு நேரங்களில் பார்வையிட முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது.

3 மாநில மக்களவை இடைத்தேர்தல்

புதுடெல்லி: மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கான நாடாளுமன்ற மக்களவைத் இடைத்தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் திரையரங்குகள் திறப்பு

காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி கோவில்களில் திருவிழாக்கள், உள்ளிட்டவற்றை நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.