டேராடூன்: உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டத்தில் சக்ரதா வட்டத்தில் புல்ஹாத்-பைலா சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். நான்கு பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து போலிசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோருடன் இணைந்து சக்ரதா மாஜிஸ்திரேட்டும் உடன் சென்றுள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகளும் நடந்து வருகின்றன.
டேராடூன் மாவட்டம் சக்ரதா பகுதியில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்தில் இருந்து சிறிய பேருந்து ஒன்று நேற்றுக் காலை சென்றுகொண்டிருந்தபோது, தியுதி என்னும் இடத்திற்கு அருகே, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதில் அந்த வாகனத்தில் இருந்த 13 பேர் பரிதாபமாக பலியாயினர். நான்கு பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் மக்களின் உதவியுடன் காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

