புதுடெல்லி: வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் 'ஹர் கர் தஸ்தக்' திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
'ஒவ்வொரு வீட்டின் கதவும் தட்டப்படும்' என்ற கருப்பொருளில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கை மேலும் வேகமெடுக்கும் என நம்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போடும் நடவடிக்கையை மந்தகதியில் மேற்கொள்ளும் மாவட்டங்களில் இந்தப் புதிய திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் அந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினருக்கும் குறைவாக தடுப்பூசி போடப்பட்டுள்ள மாநிலங்களை முதலில் குறிவைத்துள்ளது மத்திய சுகாதார அமைச்சு.
இதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தக்கூடும் எனத் தெரிகிறது.
"அடுத்த ஒரு மாத காலத்துக்கு இந்தத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படும். சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி குறித்த பிரசாரத்தை மேற்கொள்வர். மேலும், முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு வீட்டில் வைத்தே தடுப்பூசி போடப்படும்.
"இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் நாட்டில் புதிதாக 10,423 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. இது கடந்த 259 நாள்களில் பதிவாகிய ஆகக்குறைவான அன்றாட எண்ணிக்கையாகும். நேற்று முன்தினம் 443 பேர் மாண்டுவிட்டனர்.