தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடப்பிதழ் உறை கேட்டவர்க்குக் கடப்பிதழையே அனுப்பி வைத்த 'அமேசான்'

2 mins read
c6d67f4d-2978-4c39-a8b4-36995a6f1c1b
தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்ட கடப்பிதழ் விரைவில் உரியவரிடமே ஒப்படைக்கப்படவுள்ளது. படம்: இணையம் -

இணைய வணிகத்தளங்கள் வழியாக பொருள்களை வாங்குவோர்க்கு, கேட்டதற்குப் பதிலாக வேறு பொருள் வந்துசேர்வது தொடர்பான செய்திகளைக் கேள்விப்படுவது புதிதல்ல!

அவ்வகையில், சென்ற மாதம் கேரளாவின் ஆலுவாவைச் சேர்ந்த ஒருவர் ஐபோன் 12 பணிப்பு (order) செய்ய, அவருக்கு ஒரு சலவைக்கட்டியும் ஐந்து ரூபாய் நாணயமும் வந்து சேர்ந்தது.

இந்நிலையில், அதைவிட வேடிக்கையான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

வயநாடு மாவட்டம், கணியம்பேட்டையைச் சேர்ந்த மிதுன்பாபு என்பவர், அமேசான் இணையத்தளம் வழியாக கடப்பிதழ் உறை ஒன்றுக்குக் கடந்த மாதம் 30ஆம் தேதி பணிப்பு செய்திருந்தார்.

இம்மாதம் 1ஆம் தேதி அமேசானில் இருந்து வந்து சேர்ந்த பெட்டியைப் பிடித்துப் பார்த்த மிதுன் வியப்பின் உச்சத்திற்கே சென்றார். ஏனெனில், கடப்பிதழ் உறையோடு உண்மையான கடப்பிதழ் ஒன்றும் அதில் இருந்தது.

உடனடியாக அமேசான் வாடிக்கையாளர் சேவை மையத்தை அவர் தொடர்புகொண்டார். ஆனால், எதிர்முனையில் இருந்து வந்த பதில் அவரை மேலும் வியப்படைந்தார்.

"இதுபோன்ற தவறு இனி நிகழாது. பொருளை அனுப்பி வைக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி விற்பனையாளரை அறிவுறுத்துவோம்," என்பதே வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து கிடைத்த பதில்.

அவருக்கு வந்து சேர்ந்த கடப்பிதழ், கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த முகம்மது சாலி என்பவர்க்குச் சொந்தமானது. கடப்பிதழில் சாலியின் தொடர்பு எண் இல்லாததால் முதலில் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆனாலும், எப்படியோ முயன்று, ஒருவாறாக சாலியின் அழைப்பு எண்ணைத் தெரிந்துகொண்டு, அவரிடம் தகவல் தெரிவித்தார் மிதுன்.

அந்தக் கடப்பிதழ் உறையை முதலில் வாங்கிய சாலி, தமக்கு அது பிடிக்கவில்லை என்பதால் விற்பனையாளரிடமே அதனைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஆனால், அவ்வுறைக்குள் போட்டுப்பார்த்தபின் அதிலிருந்த தமது கடப்பிதழை எடுக்காமலேயே திரும்ப அனுப்பிவிட்டார்.

அதனைப் பெற்றுக்கொண்ட விற்பனையாளரும் அதனைச் சரிபார்க்கமலேயே மிதுனுக்கு விற்றுவிட்டதே இக்குழப்பத்திற்குக் காரணம்.

இந்நிலையில், கடப்பிதழுக்கு உரியவரான சாலியிடமே விரைவில் அதனைத் திரும்ப ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளார் மிதுன்.

குறிப்புச் சொற்கள்