புதுடெல்லி: கேதார்நாத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயரச் சிலையை நேற்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
டெல்லியிலிருந்து அவர் நேற்று காலை தனி விமானம் மூலம் உத்தர காண்ட் சென்றார்.
அங்கிருந்து அவர் கேதார்நாத் புறப்பட்டார். டேராடூன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில ஆளுநர் குர்மித் சிங் மற்றும் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, கேதார்நாத் சிவன் கோவிலில் தீபாராதனை செய்து வழிபட்டார். அதன் பிறகு 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியாரின் உருவச் சிலையை அவர் திறந்து வைத்தார். மேலும் புதுப்பிக்கப்பட்ட சமாதி ஸ்தலத்தையும் திறந்து வைத்தார்.
கேதார்நாத்தில் ரூ.130 கோடி செலவிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததாக புதிய தலைமுறை தெரிவித்தது.
பின்னர் மக்களிைடயே அவர் உரையாற்றினார்.
"சமுதாய நன்மைக்காக ஆதிசங்கரர் புதிய குறிக்கோளுடன் செயல்பட்டார். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறையினருக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். தீர்த்த யாத்திரை மூலம் நமது கலாச்சாரங்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. யாத்திரையின் வாயிலாக கிடைப்பது மகிழ்ச்சி மட்டும் அல்ல பாரம்பரியமும்தான். கேதார்நாத் ஜோதிலிங்கத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும். அயோத்தியாவில் ராமருடைய கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. அயோத்தியாவுக்கு இந்த கௌரவம் நூறு ஆண்டு களுக்குப் பிறகு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் ஆதி சங்கரரின் எண்ணங்கள் நமக்கு உத்வேகத்தை அளிக்கிறது. 2013 அழிவுக்குப் பிறகு கேதார்நாத்தை மீண்டும் உருவாக்க முடியுமா என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் கேதார்நாத் மீண்டும் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு தலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புத்த கயா உள்ளிட்ட ஆன்மீகத் தலங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. அதேபோல் இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது," என்று பிரதமர் மோடி கூறினார்.

