புதுடெல்லி: இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரிக்கும் இவ்வாண்டு செப்டம்பருக்கும் இடையில் இணையச் சேவை 26 முறை முடக்கப்பட்டது.
ராஜஸ்தானில் மற்ற நகர்களிலும் அடிக்கடி இணையச் சேவை முடக்கப்படுகிறது. 81 மில்லியன் பேர் வசிக்கும் ராஜஸ்தானில் செப்டம்பர் 26ஆம் தேதி இணையச் சேவை முடக்கப்பட்டது. அன்றைய தினம், ராஜஸ்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு
நடத்தப்பட்டதால் இணையச் சேவைக்கு ஒருநாள் தடை விதிக்கப்பட்டது. ஏறத்தாழ 1.6 மில்லியன் தேர்வாளர்கள் அந்தத் தேர்வை எழுதினர்.
தேர்வுகளில் மாணவர்கள் ஏமாற்று வேலை செய்வதையும் போராட்டங்களில் மக்கள் ஈடுபடுவதையும் தடுக்க அதிகாரிகள் இணையச் சேவையை முடக்குகின்றனர்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 750 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவ்வேளையில், நாடு முழுவதும் இணையச் சேவை முடக்கப்படுவது ஏறுமுகம் கண்டு வருகிறது.
கடந்த ஆண்டு 129 முறை இணையச் சேவை முடக்கப்பட்டது. 2014ல் இந்த எண்ணிக்கை ஆறாக இருந்ததாக இணையச் சேவைத் தடையைக் கண்காணிக்கும் 'இன்டர்நெட் ஷட்டவுன்ஸ்' எனும் இணையப் பக்கம் தெரிவிக்கிறது.
இணையச் சேவை அடிக்கடி முடக்கப்படுவதால் கடந்த ஆண்டு மட்டும் இந்தியப் பொருளியலுக்கு US$2.8 பில்லியன் (S$3.8 பி.) இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான Top10VPN கணித்துள்ளது.


