கட்சியினருடன் இன்று கலந்து பேசுகிறது பாஜக
புதுடெல்லி: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்
கிழமை நடைபெறுகிறது. பாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேசிய செயற்குழுக் கூட்டம் இது.
உத்தரப் பிரதேசம், உத்தரகா ண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டபேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது.
நான்கு மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும் பஞ்சாப்பில் பாஜக ஆட்சி அமைக்கவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இக்கூட்டத்தில் அதிகமாக விவாதிக்கப்பட உள்ளது. பஞ்சாப் காங்கிரசில் நிலவும் குழப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள பாஜக திட்டமிடும் என்றும் கூறப்படுகிறது. அந்த மாநிலத்தில் முதல்வராக இருந்த அம்ரிந்தர் சிங் பதவி விலகியதோடு விரக்தி காரணமாக காங்கிரஸ் கட்சியை விட்டும் விலகி புதிய கட்சியைத் தொடங்கிவிட்டார். அவரது ஆதரவை பாஜக பெறலாம் என அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றி அனைத்து மாநில பாஜக தலைவா்கள், மாநில பொதுச் செயலாளா்கள் (அமைப்பு), தேசிய செயற்குழு உறுப்பினா்கள் என அனைவரும் காணொளி மூலம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாநில கட்சித் தலைமை அலுவலகங்களில் இருந்து அவா்கள் கூட்டத்தில் கலந்துகொள்வாா்கள்.
பாஜக தேசிய பொறுப்பாளா்கள், மத்திய அமைச்சா்கள், டெல்லி பிராந்திய பாஜக தலைவா்கள் உள்ளிட்டோா் டெல்லியில் இருந்தபடி கூட்டத்தில் பங்கேற்பாா்கள். நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் மட்டுமே நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவா் ஜே.பி.நட்டா தொடக்கவுரையாற்றுவாா். பிரதமா் நரேந்திர மோடி நிறைவுரையாற்றுவாா் என்று தெரிகிறது.
அண்மையில் 13 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக சற்று பின்னடைவைச் சந்தித்தது. இது தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

