மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மருத்துவமனை ஒன்றில் நேற்று காலை மூண்ட தீயில் கொரோனா நோயாளிகள் 10 பேர் கருகி மாண்டுவிட்டனர்.
அந்த மாநிலத்தின் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் முற்பகல் 11 மணியளவில் திடீரென தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த சிகிச்சை அறைவில் 17 நோயாளிகள் இருந்ததாகவும் அவர்களில் 10 பேர் மாண்டுவிட்டதாக வும் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர பேஸ்லே செய்தியாளர்களிடம் கூறினார்.
தீப்பிடித்ததற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் கூறினார்.
இருப்பினும் முழுமையான விசாரணைக்கு மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
அலட்சியம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறதா என்று விசாரிக்குமாறும் தீப்பிடித்தற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியுமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தீப்பிடித்து எரிந்த ஒரு மணி நேரத்தில் தீ முற்றாக அணைக்கப்பட்டுவிட்டதாக தீயணைப்புப் படை கூறியது.
உயிரிழந்தோரில் ஒருவர் தவிர மற்றவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். மாண்ட 10 பேரில் ஆறு பேர் ஆண்கள். தீக்காயமடைந்த ஏழு நோயாளிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. ஒருவரைத் தவிர மற்ற ஒன்பது பேரும் அடையாளம் காணப்பட்டுவிட்டனர்.