அயோத்தி: அயோத்தியில் தீபாவளியையொட்டி ஏற்றப்பட்ட விளக்குகளிலிருந்து மக்கள் எண்ணெய்யை வழித்து எடுத்துச் சென்றுள்ளனர். அதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜக அரசைக் குறைகூறி வருகின்றன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில் பாஜக ஆளும் அந்த மாநில அரசு தீபாவளி அன்று அயோத்திக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.
கடந்த ஆண்டு தீபங்களை ஏற்றுவதில் முதன்முறையாக உலக சாதனையும் படைக்கப்பட்டது. இந்த ஆண்டு முன்பைவிட அதிகமாக சுமார் 12 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
இவ்விளக்குகள், வட மாநிலங்களில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் கடுகு எண்ணெயில் ஏற்றப்படுகின்றன.
இதனால், அயோத்திவாசிகள் திரண்டு எரியும் விளக்குகளை அணைத்து, அதிலிருந்து கடுகு எண்ணெய்யை வீட்டிற்கு எடுத்துச் சென்றிருப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி உள்ளன.
அவை மத்திய, மாநில அரசுகள் மீது கடும் குறைகூறுபவையாக உள்ளதாக ஊடகங்கள் தெரி வித்தன.