மிஸோரம் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரேணு சர்மாவிற்கு ‘மிஸோ’ மொழி தெரியாது என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஸொரம்தங்கா, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தலைமைச் செயலாளர்க்கு மிஸோ மொழி தெரியாததைப்போல, தம்முடைய அமைச்சர்களில் எவருக்கும் இந்தி தெரியாது என்று திரு ஸொரம்தங்கா கடந்த மாதம் 29ஆம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 2ஆம் தேதி ரேணு சர்மா, மிஸோரம் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனம், முதல்வர் ஸொரம்தங்காவிற்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
கூடுதல் தலைமைச் செயலாளர் ஜே.சி.ராம்தங்கா, மிஸோரம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், திரு அமித் ஷாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், “மிஸோரம் மக்களில் பெரும்பாலார்க்கு இந்தி தெரியாது. அதுபோல, அமைச்சர்களுக்கும் இந்தி தெரியாது. அவர்களில் சிலருக்கு ஆங்கிலமும் வராது. நிலைமை இப்படி இருக்க, மிஸோ மொழி தெரியாத தலைமைச் செயலாளரால் ஒருபோதும் திறமையாக வேலை முடியாது,” என்று திரு ஸொரம்தங்கா குறிப்பிட்டுள்ளார்.