போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகர மருத்துவமனையில் திடீர் தீ மூண்டதில் நான்கு பச்சிளம் குழந்தைகள் பலியாகின.
கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் திங்கள் கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
அங்கு வந்த தீயணைப்புப் படையினர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் 36 குழந்தைகள் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின் கசிவினால் தீ மூண்டிருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
மத்தியப் பிரதேச மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
இந்த நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தமது டுவிட்டர் பதிவில் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி உயர் அதிகாரி ஒருவர் சம்பவத்தை விசாரிக்கவிருக்கிறார்.
"குழந்தைகள் உலகை விட்டு பிரிந்து சென்றது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது. குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்," என்று முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.