கௌஹாத்தி: இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தொடங்கப்பட்ட ஒரு நீர்வழங்கல் திட்டத்திற்கு ‘பாகிஸ்தான்’ என்று பெயரிட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மொழியியல் சிதைவே இப்பிரச்சினைக்குக் காரணம்!
தெமாஜி மாவட்டத்தில் இருக்கும் ‘பாக் ஸ்தான் சுக்’ என்ற இடம், காலப்போக்கில் மருவி ‘பாகிஸ்தான் சுக்’ என்றாகிவிட்டது. 'பாக் ஸ்தான் சுக்' என்பதற்கு வளைவுச்சாலை வழியாகச் சென்றடையக்கூடிய இடம் எனப் பொருள்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அரசாங்க ஆவணங்களிலும் அப்பெயரே பயன்படுத்தப்பட்டு வருவதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி குறிப்பிட்டது.
இதனால், பொதுச் சுகாதாரப் பொறியியல் பிரிவினரும் அந்த நீர்வழங்கல் திட்டத்திற்கு ‘பாகிஸ்தான் குடியிருப்பு நீர்வழங்கல் திட்டம்’ என்று பெயரிட்டனர்.
இது சர்ச்சையைக் கிளப்ப, பீர் லச்சித் சேனா எனும் அமைப்பினர், பொதுச் சுகாதாரப் பொறியியல் துறையிடம் சில நாள்களுக்குமுன் முறையிட்டனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போகவே, திட்டம் குறித்த பெயர்ப் பலகையில் இருந்த ‘பாகிஸ்தான்’ என்ற சொல்லை அவ்வமைப்பினர் அழித்தனர்.
“இப்போது அப்பகுதியில் வசிக்கும் மக்களின் மூதாதையர் ‘பாக் ஸ்தான் சுக்’ என்ற பெயரைச் சூட்டினர். தொலைவு காரணமாக ஒருகாலத்தில் அப்பகுதி தனித்திருந்தது. அங்கு அகோம், சுத்தியா இன மக்களே வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் யாரும் இல்லை,” என்று தெமாஜி துணை மண்டல அலுவலர் நந்திதா ராய் கோகைன் கூறினார்.
இப்போது, அந்த நீர்வழங்கல் திட்டம் ‘பர்ஹாகுரி தக்கின் சுக்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் சொன்னார்.