புதுடெல்லி: இந்திய அரசின் மருத்துவ ஆய்வுக் கழகமும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த 'கொவேக்சின்' தடுப்பூசி, கொரோனா கிருமிக்கு எதிராக 77.8% செயல்திறன் கொண்டிருப்பதாக 'தி லான்செட்' மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், உருமாறிய டெல்டா கிருமிக்கு எதிராக கொவேக்சின் 65.2% பயனுள்ளதாக இருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் அவசியம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கொவேக்சின் மருந்து தயாரிப்பில் செயலிழந்த கிருமி தொழில்நுட்பம் என்ற ஓர் உத்தி பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தடுப்பூசியை இரு முறை போட்டுக்கொண்டவர்களின் உடலில் இரண்டு வாரம் கழித்து வலுவான எதிர்ப்பு சக்தி உருவாகிறது என்று அந்த இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் கொவேக்சின் பரிசோதனை 2020 நவம்பரில் இருந்து 2021 மே வரை 18 வயது முதல் 97 வரை வயதுள்ள 24,419 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்டது.
கொவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் அல்லது மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதை அந்த இதழ் சுட்டியது.
இந்தியாவில் கொவேக்சின் தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் அவசரகால பயன்பாட்டுக்கு வந்தது. அந்தத் தடுப்பூசி மீதான ஐயங்களை இந்த மருத்துவ இதழ் ஆய்வு போக்கிவிடும் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே, இந்திய தயாரிப் பான கொவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பஹ்ரைன் அனுமதி வழங்கியுள்ளதாகத் நேற்றுத் தகவல்கள் தெரிவித்தன.

