ரிசர்வ் வங்கித் திட்டங்கள்;
பிரதமர் தொடங்கிவைத்தார்
புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டு புதுமைத் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றுத் தொடங்கிவைத்தார்.
சிறு முதலீட்டாளர்கள் அரசாங்க நிறுவனங்களில் பங்குகளை வாங்கும் சந்தையை அணுகுவதை மேம்படுத்துவது அவற்றில் ஒரு திட்டம். மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான புதிய வழியை இது வழங்குகிறது.
மற்றொன்று, ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டம். நிறுவனங்களுக்கு எதிரான வாடிக்கையாளர்களின் புகார்களுக்குத் தீர்வுகாணும் முறையை இது மேலும் மேம்படுத்தும்.
நாடு முழுவதும் 6,000 தண்ணீர் ஆய்வகங்கள் அமைக்க திட்டம்
புதுடெல்லி: இந்தியாவில் தண்ணீர் அளவு, தரம், விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்த நாடு முழுவதும் 6,000 தண்ணீர் ஆய்வுக்கூடங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே 2,000 பரிசோதனைக்கூடங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. 4,000 பரிசோதனைக்கூடங்களை வரும் ஆண்டுகளில் அமைக்க மத்திய அரசு எண்ணி உள்ளதாக புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நீர் மின்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார்.
புதுடெல்லி காற்றுத்தரம் மிகமோசமான நிலையை எட்டியது
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்றுத்தரம் மிக மோசமான அளவை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
நகர் முழுவதும் புகைமூட்டம் நிலவுகிறது. பகல் வேளைகளிலேயே சாலையில் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் நிலை உள்ளது. நேற்று டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 360 ஆக இருந்ததாக காற்றின் தரம், வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
வாகன நெரிசல் காரணமாகவும் பக்கத்து மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதாலும் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது.
'சமாஜ்வாதி அத்தர்'; அகிலேஷ் யாதவ் அரசியல் வாசனை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சியின் 'சமாஜ்வாதி அத்தர்' என்ற வாசனைத் திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.
சமாஜ்வாதி கட்சிப் பிரமுகர் பம்மி ஜெயின் என்பவர் தயாரித்த இந்த வாசனைத் திரவியம் 22 இயற்கை வாசனைகளால் ஆனது என்றும் இந்த வாசனை தேர்தலில் மாயாஜாலம் நிகழ்த்தும் என்றும் திரவியத்தை வெளியிட்டு பேசிய அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். படம்: ஊடகம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் சட்டமன்றம் தீர்மானம்
புதுடெல்லி: மத்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை பஞ்சாப் சட்டமன்றம் நிறைவேற்றியது.
அவையில் நடந்த விவாதத்திற்குப் பிறகு, இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக அந்தச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானம் இது.
அமரீந்தர் சிங் பஞ்சாப் முதலமைச்சராக இருந்தபோது கடந்த ஆண்டு அக்டோபரில் முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

