மூச்சுவிடத் திணறும் டெல்லி! சாட்டையைச் சொடுக்கிய உச்ச நீதிமன்றம்!

மூச்சுவிடத் திணறும் டெல்லி! சாட்டையைச் சொடுக்கிய உச்ச நீதிமன்றம்!

1 mins read
694b6eb5-130e-4a00-8278-4c629dab3716
டெல்லியில் காற்றுத்தரம் படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளது. படம்: இபிஏ -

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மக்கள் மூச்சுவிட முடியாத அளவிற்குக் காற்றுத்தரம் படுமோசமாக இருக்கிறது.

அந்நகரம் பனிப்புகையால் சூழப்பட்டுள்ள நிலையில், "வீட்டிற்குள்ளேயே முகக்கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

அவர் தலைமையிலான சிறப்பு அமர்வு இன்று சனிக்கிழமை கூடி, அவசரகால நடவடிக்கைகளை எடுத்து, பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாணுமாறு மத்திய அரசையும் டெல்லி அரசையும் வலியுறுத்தியது.

தேவைப்பட்டால், இரண்டு நாள்கள் முடக்கநிலையை அறிவிக்கலாம் என்றும் அது ஆலோசனை வழங்கியது.

இதனையடுத்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம், ஒரு வார செயல்திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, அங்கு நாளை மறுநாள் 15ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து ஒரு வாரத்திற்குப் பள்ளிகள் மூடப்படும். அரசு ஊழியர்கள் அனைவரும் ஒரு வார காலத்திற்கு வீட்டிலிருந்தே பணிசெய்வர்.

முடிந்த அளவிற்கு வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் நடைமுறையைக் கடைப்பிடிக்கும்படி தனியார் அலுவலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

14ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை நான்கு நாள்களுக்குக் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி இல்லை.

குறிப்புச் சொற்கள்