புதுடெல்லி: அண்மையில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற் படுத்தி வருகிறார்.
அதன் காரணமாக அவரது டுவிட்டர் கணக்குக்கூட நிரந்தரமாக மூடப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு "தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொல்பவர்கள் அலுவலகங்களுக்கு நடந்தே செல்ல வேண்டும்," என்று கூறி சர்ச்சையைக் கிளப்பி இருந்தார்.
இந்த நிைலயில் "1947ல் இந்தியாவுக்கு கிடைத்தது சுதந்திரம் அல்ல பிச்சை!" என்று கூறி அனை வரையும் அதிர்ச்சி அடைய வைத்துஉள்ளார். இதனால் அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்தது குறித்து கங்கனா பேசிய 24 விநாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த சர்ச்சைக்குரிய காணொளியை பாஜக எம்.பி. மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி தன் சமூக வலை தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த காணொளியில் "நாடு உண்மையிலேயே 2014ஆம் ஆண்டில்தான் சுதந்திரம் அடைந்தது. 1947ல் கிடைத்தது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. பிச்சையாகக் கிடைத் ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா?," என்று கங்கனா ரணாவத் பேசி உள்ளார். தொலைக்காட்சி ஒளிவழி ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கங்கனா இவ்வாறு பேசியதாகக் கூறப் படுகிறது. இந்த காணொளியைப் பகிர்ந்துள்ள வருண் காந்தி, "கங்கனாவின் கருத்து தேச விரோதச் செயல். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை இழிவுபடுத்தக் கூடாது. அவர்களை மக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது," என்று கங்கனாவைக் கடுமையாகச் சாடி உள்ளார்.
மேலும், கங்கனா மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் புகார் அளித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியும் கங்கனாவின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அவருக்கு வழங்கப்பட்ட 'பத்மஸ்ரீ' விருதை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.