டெல்லி: டெல்லியில் குடியரசுத் தினத்தன்று மத்திய அரசுக்கு எதிராக 'டிராக்டர்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் முதல்வர் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயிகள், வேளாண் அமைப்புகள், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி நடந்த குடியரசு தின விழாவின்போது விவசாயிகள் டிராக்டரில் டெல்லிக்குள் ஊர்வலமாக வரவும் பேரணி நடத்தவும் டெல்லி போலிசார் அனுமதி வழங்கினர்.
ஆனால் அமைதியாக தொடங்கிய பேரணி, திடீரென டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலிசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
இதில் டெல்லி செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள் அமைப்பினர் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில் தங்களின் கொடியை ஏற்றினர்.
விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என்று உறுதி கூறப்பட்டது.
இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இருக்கும் பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
குடியரசு தினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 83 விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்படும் என அந்த அறிவிப்பு சொல்கிறது.
இதன் தொடர்பில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எனது அரசு இருக்கிறது என்பதை உறுதி செய்கிறேன். கடந்த ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடந்த பேரணியில் போலிசாரால் கைது செய்யப்பட்ட 83 விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்," என்று அவர் கூறியுள்ளார்.

