அமராவதி: போதைப்பொருள் பயன்பாடு இளையர்களின் திறனையும் வாழ்க்கையையும் அழித்துவிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் நடைபெற்ற தென்மண்டல மன்றக் கூட்டத்தில் பேசிய அவர், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க மாநில முதல்வர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
தென்னிந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், தென்னிந்திய கலாசாரம், பாரம்பரியம், மொழிகள் ஆகியவை நாட்டின் பழமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகக் கூறினார்.
மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பில் அறவே சகிப்புத்தன்மை கூடாது என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.
"குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அந்த வழக்குகளை விசாரித்து முடிக்க 60 நாள்கள் என்ற கால அவகாசத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
"வழக்குகளை விரைவுபடுத்த, மாநில அரசுகள் சட்டப்பிரிவு இயக்குநர் என்ற புதிய பொறுப்பை உருவாக்க வேண்டும்," என்று அமித் ஷா மேலும் கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் பொன்முடி, ஆந்திரா சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா சார்பில் அம்மாநில உள்துறை அமைச்சர் முகமது அலி, கர்நாடகா சார்பில் முதல்வர் பசவராஜ் பொம்மை, புதுச்சேரி சார்பில் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.