புதுடெல்லி: இந்தியா 20 மாதங்களுக்குப் பிறகு பெரிய அளவில் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கதவைத் திறந்துவிட்டு உள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்று மட்டுப்பட்டு இருப்பதையும் தடுப்பூசி விகிதாச்சாரம் மேம்பட்டு இருப்பதையும் கவனத்தில் கொண்டு ஒத்த நிலவரங்களைக் கொண்ட 99 நாடுகளின் பயணிகள் வருவதற்கு இந்தியா இப்போது அனுமதித்துள்ளது.
இந்தியா சென்ற ஆண்டு மார்ச் முதல் உலகப் பயணிகளுக்கு விசா வழங்கவில்லை. இப்போது இந்தியா செல்வோர் தங்களைத் தாங்களே 14 நாட்கள் பாதுகாத்துக்கொண்டால் போதும். தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டாம்.
வாடகை விமானங்களில் பயணிகள் இந்தியா செல்ல சென்ற மாதமே அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த ஏற்பாட்டை நேற்று முதல் வர்த்தக விமானங்களுக்கும் இந்திய அதிகாரிகள் நீடித்தனர். இந்தியப் பயணிகள் ஏற்கெனவே உள்நாட்டில் பல இடங்களுக்கும் செல்லத் தொடங்கிவிட்டனர்.
இந்தியாவில் சென்ற மே மாதத் தொடக்கத்தில் 400,000 பேருக்கும் மேற்பட்ட மக்கள் அன்றாடம் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானார்கள். ஆனால் இப்போது அன்றாட தொற்று ஏறக்குறைய 15,000 ஆக மிகவும் குறைந்துவிட்டது. தீபாவளி பண்டிகையை இந்த மாதம் குடும்பம் குடும்பமாகக் கூடி இந்தியர்கள் கொண்டாடினர்.
இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் பெரிதும் சூடுபிடித்துள்ளது. ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் மீண்டும் தொற்று கூடும் என்ற பயம் இருக்கிறது. என்றாலும் விதிகள் தளர்த்தப்படுவதால் சுற்றுப் பயணத்துறைக்கு நல்ல வாய்ப்பு என்று இந்திய ரயில்வே, உணவு, சுற்றுலாத் துறையின் சுற்றுலா சந்தைப் பிரிவின் இயக்குநர் ரஜினி ஹசிஜா தெரிவித்தார்.
இருந்தாலும் 3வது தொற்று அலை ஆபத்து இன்னமும் அறவே ஒழிந்துவிடவில்லை என்று அவர் எச்சரித்தார்.