புதுடெல்லி: டெல்லியில் நீடித்து வரும் கடும் காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறும் மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை, ஒரே வழக்காக மாற்றி உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நேற்று தலைமை நீதிபதி என்.வி. ரமணாவை உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்ற விசாரணையின்போது, காற்று மாசு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக செயல்படக் கூடாது என்றும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து செலவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.
டெல்லி அரசு கூறும் நொண்டிச் சாக்குகளை ஏற்க இயலாது என்றும் பிறர் மீது பழிபோடுவதை ஏற்க இயலாது என்றும் கடுமையாகச் சாடிய நீதிபதிகள், மாசுபாட்டுக்கான காரணங்கள் குறித்து டெல்லி அரசு தெரிவித்த விளக்கங்களை தங்களால் ஏற்க இயலாது என்றனர்.
டெல்லி அரசின் இத்தகைய போக்கு, அதன் வருமானத்தை தணிக்கை செய்ய தூண்டுகிறது என்றும் அதிகமான போக்குவரத்து, தொழிற்சாலைகள், வாகன நெரிசல் ஆகியவைதான் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
காற்று மாசு காரணமாக சிறார்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதாகக் கவலை தெரிவித்த நீதிபதிகள், இத்தகைய சூழ்நிலையில் சிறார்களால் எப்படிப் பள்ளிக்கு வர இயலும் எனக் கேள்வி எழுப்பினர்.
முன்னதாக காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முழு முடக்க நிலையை அமல்படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ள காற்று மாசு சூழலைச் சமாளிக்க ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே சில காலம் பணிபுரியும் வாய்ப்புகள் குறித்து மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காற்று மாசு தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க மத்திய அரசு அவசரக் கூட்டத்தைக் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.