புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 77 அமைச்சர்களையும் எட்டு குழுக்களாகப் பிரித்துள்ளார் பிரதமர் மோடி.
தனது தலைமையிலான மத்திய அரசின் நிர்வாகத்திறனை மேம்படுத்த ஏதுவாக அவர் இவ்வாறு குழுக்களை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு குழுவிலும் ஒன்பது அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஒவ்வொரு குழுவுக்கும் மூத்த அமைச்சர் ஒருவர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார்.
மத்திய அரசின் முக்கிய திட்டங்களைப் பற்றிய செயல்பாடுகளைத் தெரிவிக்க ஒவ்வோர் அமைச்சுக்கும் தனி இணையத்தளம் உருவாக்குவது, அமைச்சர்கள் செயல்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தனி அமைப்பை உருவாக்குவது, அமைச்சு நிறைவேற்றி உள்ள திட்டங்களைப் பற்றிய விவரங்களுடன் கையேடுகள் தயாரிப்பது என இக்குழுக்கள் பல்வேறு பணிகளைக் கவனிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு குழுவும் நிபுணத்துவம் உள்ள மூன்று இளம் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட துணைக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் அக்குழுவைக் கொண்டு ஆராய்ச்சி, தகவல் தொடர்பு சார்ந்த விஷயங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஏற்கெனவே மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி 'சிந்தனை அமர்வு' என்ற பெயரில் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
சுமார் ஐந்து மணி நேரம் இந்த ஆலோசனை நீடிக்கும். இதுவரை ஐந்து 'சிந்தனை அமர்வு' கூட்டங்கள் நடந்துள்ளன.
அச்சமயம் தனிநபர் செயல்திறன், திட்ட அமலாக்கம், அமைச்சரவை செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்களைக் கொண்ட புது குழுக்களை அமைத்துள்ளார் பிரதமர் மோடி.