புதுடெல்லி: லக்கிம்பூர் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க உத்தரப் பிரதேச அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
எட்டு பேரை பலி வாங்கிய அந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, உத்தரப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாநில காவல்துறை உரிய வகையில் செயல்படவில்லை என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், வெளி மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இதற்கு உத்தரப் பிரதேச அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அதற்கு அந்த அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதையடுத்து, இரு நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. எந்த நீதிபதி வழக்கை மேற்பார்வையிடுவார் என விரைவில் அறிவிக்க உள்ளது.