அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு
புதுடெல்லி: மத்திய அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்க ளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் அவசர சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இனி இரு இயக்குநர்களும் ஐந்து ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிக்க முடியும். முன்னதாக, இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. இந்த அவசர சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, நேற்று நடைமுறைக்கு வந்தது.
ரூ.1.5 கோடி மோசடி: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் மீது போலிசில் புகார்
மும்பை: தம்மிடம் ரூ.1.5 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் பாரய் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உடற்பயிற்சிக்கூடம் அமைத்து தருவதாகக் கூறி தம்மிடம் பணம் பெற்றுக்கொண்ட இருவரும் அவ்வாறு செய்யவில்லை என்றும் பணத்தை திருப்பிக் கேட்டபோது மிரட்டல் விடுத்ததாகவும் நிதின் தமது புகாரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இக்குற்றச்சாட்டை ஷில்பா ஷெட்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மாணவர்களுக்கு சீருடை வாங்க பெற்றோர் வங்கிக்கணக்கில் பணம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 12 மில்லியன் அரசுப் பள்ளி மாணவர்கள் சீருடை வாங்கிக்கொள்ள அவர்களுடைய பெற்றோரின் வங்கிக்கணக்கில் தலா ரூ.1,100 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இலவசச் சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சீருடைகளின் தரம் மோசமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெற்றோரே அரசு வழங்கும் தொகையைக் கொண்டு சீருடை வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 400% அதிகரித்ததாக தகவல்
புதுடெல்லி: கடந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான இணையம் வழியிலான சைபர் குற்றங்கள் சுமார் 400 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது குற்ற எண்ணிக்கை இந்த அளவு அதிகரித்துள்ளதாக அந்த காப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இத்தகைய குற்றங்கள் அதிகம் நடைபெற்ற மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 170 குற்றச்சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கர்நாடகாவில் 144 குற்றங்கள், மகாராஷ்டிராவில் 137, கேரளாவில் 107, ஒடிசாவில் 71 குற்றச்சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டில் குழந்தைகளைக் குறிவைத்து 842 குற்றங்கள் நடந்துள்ளன.
மாடு பால் கறக்க மறுக்கிறது: போலிசில் புகார் கொடுத்த விவசாயி
போபால்: மாடு பால் கறக்க மறுப்பதாக அதன் உரிமையாளர் அளித்த புகார் போலிசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பாபுலால் என்ற விவசாயி இப்புகாரை அளித்துள்ளார். 45 வயதான இவருக்குச் சொந்தமாக மாடுகள் உள்ளன. இந்நிலையில், தம்மிடம் உள்ள எருமை மாடு ஒன்று போதுமான அளவு பால் கறக்க அனுமதிப்பதில்லை என்று உள்ளூர் காவல்நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். பின்னர் ஒரு நாள் தனது மாட்டையும் காவல்நிலையத்துக்கே அவர் அழைத்து வந்ததால் போலிசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கால்நடை மருத்துவரை அனுப்பி பாபுலாலுக்கு உதவுமாறு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இதைடுத்து, பாபுலாலின் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: கேரளாவில் நீடிக்கும் மழை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்னும் சில பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. இதையடுத்து, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய சில தினங்களாக பெய்த மழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள சில ஆறுகளில் இன்னும் கூட வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சில பகுதிகளில் சிறிய அளவில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

