'சுதந்திரப் போராட்டத்திலும் நாட்டைக் கட்டமைக்கவும் பாடுபட்டுள்ளனர்'
புதுடெல்லி: இந்தியாவைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமுதாயத்தின் பங்கு அளப்பரியது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எனினும் பழங்குடியினரின் பங்களிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு முழுமையாகச் சொல்லப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தீவிரமாக போராடிய பழங்குடியின தலைவர்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிர்சா முண்டா முக்கியமானவர்.
இனி அவரது பிறந்த தினம் ஆண்டுதோறும் பழங்குடியினர் கௌரவ தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினம் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அப்போது, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின சமுதாயத்தினரின் பங்கு அளப்பரியது என்று அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் தங்களது சுயநல அரசியலுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், அன்றைய ஆட்சியாளர்கள் பழங்குடி மக்களை அறவே மறந்துவிட்டதாகச் சாடினார்.
மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு நாட்டின் இதர பகுதிகளில் கிடைப்பது போல பழங்குடியினப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், கழிவறைகள், இலவச மின்சாரம், எரிவாயு இணைப்புகள் போன்ற வசதிகள் கிடைத்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின தலைவர்களின் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம் என்றார் பிரதமர் மோடி.
அந்த வரலாற்றை புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அனைவரின் கடமை என்று குறிப்பிட்ட அவர், அந்நிய ஆட்சிக்கு எதிராக, காசி கரோ இயக்கம், மிசோ இயக்கம், கோல் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றதாக நினைவுகூர்ந்தார்.

