திருவனந்தபுரம்: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்றும் அதன் காரணமாக கேரளாவில் கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே அங்கு பல நாள்களாக பெய்து வரும் அடைமழை அம்மாநிலத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு அங்குள்ள எட்டு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. இதனால் தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், மீண்டும் கனமழையை எதிர்கொண்டுள்ளது அம்மாநிலம். இதனால் சேதங்களும் பாதிப்பும் அதிகரிக்கும் எனும் கவலை அதிகரித்துள்ளது.
அண்மைய சில தினங்களில் மட்டும் மழைக்கு 69 பேர் பலியாகிவிட்டனர்.
நேற்று முன்தினம் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் இரு குழந்தைகளும் ஒரு பெண்ணும் உயிரிழந்தனர்.
அரபிக்கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்குத் திசையில் நகரும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் அதிதீவிர தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று கூறியுள்ளது.
கேரளாவில் மழை, மண்சரிவு காரணமாக இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 400 கோடி ரூபாய் மதிப்புள்ள விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கி வீணாகிவிட்டன.
கனமழை காரணமாக ஆலம்புழா, கோட்டயம், பத்தினம்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.