புவனேஸ்வர்: கடந்த 25 ஆண்டுகளாக தனது குடும்பத்துக்காக உழைத்த ரிக்ஷா தொழிலாளிக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகளை எழுதி வைத்துள்ளார் மினாதி பட்நாயக் என்ற 63 வயது மூதாட்டி.
இவரது கணவர் கல்லீரல் செயலிழப்பால் கடந்த ஆண்டு காலமானார்.
அதன் பின்னர் ஒரே மகளும் மாரடைப்பால் சில தினங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துவிட்டார்.
இந்தச் சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த மினாதிக்கு உறவினர்களில் ஒருவர்கூட உதவ முன்வரவில்லை. இந்நிலையில் ரிக்ஷா தொழிலாளி புதா சமலி ((படம்) என்பவரது குடும்பம் மினாதிக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.
மினாதியின் குடும்பத்துக்காக கடந்த 25 ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வந்துள்ளார் புதா சமலி. மினாதியின் மகளை காலை பள்ளி, கல்லூரிக்கு அழைத்துச் சென்று மாலை அழைத்து வருவது, அவரது குடும்பத்தாரை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது என்று உதவியுள்ளார்.
25 ஆண்டுகளாக தனது குடும்பத்தின் அனைத்து தருணங்களிலும் உடன் நின்றதுடன் எதையும் எதிர்பார்க்காமல் இன்றளவும் தனக்கு ஆறுதலாக இருக்கும் புதா சமலி குடும்பத்தின் அன்பால் நெகிழ்ந்து போயுள்ளார் மினாதி.
இதையடுத்து தனக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டையும் தங்க நகைகளையும் புதா சமலி குடும்பத்துக்கு அளித்துள்ளார் மினாதி.