இந்தோனீசியாவுக்கு 50 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பும் இந்தியா
புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் முன்னணியில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் இந்தோனீசியாவுக்கு 50 மில்லியன் 'டோஸ்' கோவோவேக்ஸ் தடுப்பூசிகளை அனுப்ப உள்ளது. இந்த ஏற்றுமதி நடவடிக்கைக்கு மத்திய அரசு தடையில்லா சான்றிதழ் அளித்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவி்க்கிறது. உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகளை தயாரிக்க இயலும் என்றும் ஏற்றுமதி காரணமாக இந்தியாவில் தடுப்பூசி போடும் நடவடிக்கை பாதிக்கப்படாது என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்கள் பதவி நீட்டிப்பு: காங்கிரஸ் எதிர்ப்பு
புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தை அணுக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி வலியுறுத்தி உள்ளார். பதவிக் காலத்தை நீட்டிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் சட்டவிரோதமானது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு
புதுதடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் புதிதாக 8,865 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. ஒரே நாளில் மேலும் 197 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 463,852ஆக கூடியுள்ளது. நேற்று முன்தினம் 11,971 பேர் தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தொற்றுப் பாதிப்புக்காக தற்போது 130,793 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிய கைபேசிக்காக நடந்த மோதலில் இளையர் அடித்துக் கொலை
லூதியானா: புதிய கைபேசிக்காக நடந்த மோதலில் இளையர் ஒருவர் கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் உள்ளது ஹன்ஸ்கலான் கிராமம். நேற்று முன்தினம் இங்கு நடைபெற்ற ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார் ரன்தீப் சிங் என்ற இளையர். அப்போது அவர் வைத்திருந்த புதிய ரக 'ஐஃபோனை' சிறிது நேரம் தம்மிடம் தருமாறு மன்தீப், ஹர்பிரீத் ஆகிய இருவரும் கேட்டுள்ளனர். இதனால் மூவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. அப்போது திடீரென ரன்தீப் சிங்கை மற்ற இருவரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரன்தீப் உயிரிழந்தார்.
சர்ச்சைக்குரிய கருத்து: சல்மான் குர்ஷித் வீட்டுக்கு தீ வைப்பு
டேராடூன்: புத்தக விழாவில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்ட ஓர் அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சிலர் தீ வைத்துள்ளனர். தன் வீடு தீயில் எரியும் படம் ஒன்றை தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இருபது பேர் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பசவராஜ்: 'பிட்காயின்' முறைகேடு குறித்து சட்டப்படி விசாரணை
பெங்களூரு: கர்நாடகாவில் 'பிட்காயின்' முறைகேடு தொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி அளித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ள நிலையில், இவ்விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்று முதல்வர் பசவராஜ் தெரிவித்துள்ளார். 'பிட்காயின்' வர்த்தகம் குறித்து நாடாளுமன்ற குழு ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய வர்த்தகங்களுக்கு இந்தியாவில் இதுவரை தடை விதிக்கப்படவில்லை. இந்நிலையில், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சோதனையின்போது ரூ.600 மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்
புதுடெல்லி: ஹரியானாவில் முன்னணி தொழில் நிறுவனங்க ளில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளது. இத்தகவலை மத்திய நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்டது.

