ஒடிசா: சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் 77 இடங்களில் ஒரேநேரத்தில் மாபெரும் சோதனையை சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர். முதற்கட்டமாக பத்துப் பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் 100 நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பாலி யல் குற்றவாளிகள் இதில் சம்பந் தப்பட்டு இருப்பதாகவும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பது, அவர்கள் தொடர்பான ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றுவது உள்ளிட்டவை சம்பந்தமாக நாடு முழுவதும் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் 83 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் அடிப்படையில் நாடு முழுவதும் தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஆந்திரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மகாராஷ் டிரா, குஜராத், ஹரியானா, சத்தீஸ்கர், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 77 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. சேலம் மாவட்டம் காட்டுமரம்குட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பெங்களூவில் உள்ள நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் அவர், இணையம் மூலம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண் டனர்.
இதற்கிடையே, ஒடிசா மாநிலம் டேங்கனால் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஐந்து சிபிஐ அதிகாரிகள் சோதனையிடச் சென்றபோது அங்கிருந்த மக்கள், அதிகாரிகளைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இணையத்தில் சிறுவர் ஆபாசப்படம்: ஒரே நேரத்தில் 77 இடங்களில் சிபிஐ அதிரடி