புதுடெல்லி: மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "விவசாயிகளின் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களைத் தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்," என இந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், "பாஜக அளித்த இன்னல்களில் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் வெற்றி. இந்த போராட்டத்தில் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்," எனத் தெரிவித்து உள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "பிரகாஷ் திவாஸ் அன்று மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. மூன்று சட்டங்களும் நீக்கப்படுகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி, 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகம் என்றும் அழியாமல் இருக்கும். விவசாயிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து விவசாயத்தையும் விவசாயிகளையும் எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை வரும் தலைமுறையினர் நினைவுகூர்வார்கள். விவசாயிகளுக்கு தலை வணங்குகிறேன்," என்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

