மஸ்கட்: ஓமான் நாட்டில் 23 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இந்தியாவின் கேரள மாநிலம், வடக்கஞ்சேரிக்குத் திரும்புகிறார் பணிப்பெண்ணான ராணி அசோகன்.
ஒமானில் இவர் வேலை செய்தது அனைத்தும் இந்தியக் குடும்பங்களில்தான்.
சொந்த ஊரான வடக்கஞ்சேரியில் நவீன தோற்றமுடைய இல்லம் ஒன்றைக் கட்டிய ராணி, தம் ஒரே மகளுக்குப் பட்டக்கல்வியையும் வழங்கி அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
தொடக்கத்தில் ராணி தம் கணவருடன் சேர்ந்து ஓமானில் வசித்து வந்தார். எனினும், வடக்கஞ்சேரியில் உள்ள தங்களது வீட்டையையும் கோழிப் பண்ணையையும் பார்த்துக்கொள்ள அவரது கணவர் இந்தியா திரும்பினார்.
1998ல் ஓமானுக்குச் சென்றார் ராணி. அங்குள்ள சலாலா நகரில் பணிப்பெண்ணாக வேலை செய்யத் தொடங்கிய இவர், பின்னர் தலைநகர் மஸ்கட்டுக்கு மாறினார்.
“ஓமானுக்கு நான் வந்தபோது பல இந்தியக் குடும்பங்களில் பணிப்பெண்ணாக வேலை செய்தேன். ஆனால் ஆண்டுகள் செல்ல, எனக்கு முதுகுவலி ஏற்படத் தொடங்கியது. எனவே, துப்புரவுப் பணிகளை நான் நிறுத்திக்கொண்டேன். அதன் பிறகு, வீடுகளுக்குச் சென்று சமையல் வேலையில் மட்டும் நான் ஈடுபடத் தொடங்கினேன்,” என்றார் ராணி.
இவர் செல்லும் வீடுகள் அனைத்தும் மலையாளிகள் வசிக்கும் வீடுகள்.
“சைவம், அசைவம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எனது சமையலுக்குப் பாராட்டுகள் குவிந்தன. நான் வைக்கும் கோழிக் குழம்பு பலருக்கும் பிடித்தமான ஒன்று,” என்று இவர் கூறுகிறார்.
இரு மாதங்களுக்கு முன்னர், ராணிக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. வெளிநாட்டில் தாம் தனிமையில் இருந்ததை அப்போதுதான் இவர் முதன்முறையாக உணர்ந்தார்.
“அறைகள், சமையலறை, கழிவறையைப் பலரும் பகிர்ந்துகொள்ளும் வீடு ஒன்றில் நான் வசிக்கிறேன். எவரும் ரிஸ்க் எடுக்க விரும்பாத ஒரு நோய் கொவிட்-19. நல்ல வேளையாக, என்னிடம் இலேசான அறிகுறிகளே தென்பட்டன. என்னுடன் சேர்ந்து வசித்தோர், எனக்காக அரிசிக் கஞ்சி, காய்கறி வகைகளைச் சமைத்து எனது அறைக்கு வெளியே வைத்துவிடுவர்,” என்றார் ராணி.
“எல்லா நேரமும் எனக்குச் சோர்வாக இருந்தது. பசியே இல்லை. என் மகள், கணவரை நினைத்து உணவை மல்லுக்கட்டி சாப்பிட்டேன். என் நண்பர்களும் நான் வேலை செய்தவர்களும் அன்றாடம் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி நலம் விசாரிப்பார்கள். கைபேசியைக் கையில் பிடிக்கக்கூட அப்போது எனக்கு வலிமை இல்லை. எனினும், எனக்கு அனுப்பிவைக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டு, இரு வாரங்களில் பழைய நிலைக்கு நான் திரும்பினேன். அப்போதுதான், ஊருக்குத் திரும்ப நான் முடிவெடுத்தேன்,” என்று ராணி சொன்னார்.
தமக்குத் தொற்று உறுதியான சமயத்தில், கொவிட்-19க்கு தம் தாயாரை இவர் இழந்தார்.
ஊர் திரும்பியவுடன், தம்முடைய நிலத்தில் விவசாயம் செய்ய ராணி திட்டமிட்டுள்ளார்.
“எனக்குத் தெரிந்த படித்தவர்கள் சிலர் மஸ்கட்டில் உள்ளனர். என்னிடம் உள்ள யோசனைகளைச் செயல்படுத்த உதவ அவர்கள் உறுதிபூண்டுள்ளனர். எனக்குப் பெரிய பண்ணை வீடு ஒன்று இருப்பதால், டாக்சி சேவையைத் தொடங்குவது குறித்து நான் பரிசீலித்து வருகிறேன். எதிர்காலத்தில் அதற்கான தேவை அதிகரிக்கும்,” என்றார் ராணி.