திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த கேஆர் விஜயனும் 71, அவரது மனைவி மோகனாவும் கொச்சியில் 'ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்' என்ற பெயரில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்தி வந்தனர்.
அதில் வந்த வருமானத்தில் தினமும் 300 ரூபாய் சேமித்து 2007ல் இருவரும் தங்களுடைய ஆசையை நிறைவேற்ற வெளிநாடு சுற்றுலா சென்றனர். முதலில் அவர்கள் இஸ்ரேல் சென்றனர்.
அதன் பிறகு தங்கள் சேமிப்பு மற்றும் சிறு கடன்களின் உதவி களுடன் கடந்த 14 ஆண்டுகளில் விஜயன் - மோகனா தம்பதி 26 நாடுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு இந்த தம்பதியரின் பயணத்திற்கு தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திராவும் உதவி செய்துள்ளார்.
அதன் பின்னரே விஜயன் - மோகனா தம்பதியின் சுற்றுப்பயணம் பற்றி பலருக்குத் தெரியவந்தது. இந்நிலையில், தேநீர் கடை நடத்தி உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவந்த விஜயன் நேற்று முன்தினம் கொச்சியில் காலமானார்.
மரணமடைந்த விஜயன் தனது மனைவி மோகனாவுடன் கடைசியாக கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ரஷ்யாவுக்குச் சுற்றுலா சென்றார்.

