ராகுல்: சொன்னது நடந்தது
புதுடெல்லி: வேளாண் சட்டங்கள் மீட்டுக்கொள்ளப்படும் விவகாரத்தில் தான் சொன்னபடியே நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அண்மையில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். ராகுல்காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் சொன்னபடி நடந்துள்ளதாக பழைய காணொளி ஒன்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில், "விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். நான் அவர்களுடன் துணை நிற்கிறேன். தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். என்னுடைய வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். இந்த அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்," என்று அவர் பேசியுள்ளார்.
இதன்படி தற்போது நடந்துள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
சட்டவிரோதமாக தங்கிய ஒன்பது
பங்ளாதேஷ் நாட்டவர்கள் கைது
மும்பை: மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கிய ஒன்பது பங்ளாதேஷ் நாட்டவர்களை போலிசார் கைது செய்தனர். தகவல் கிடைத்து பிவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட சாரவல்லி கிராமத்தில் போலிசார் அதிரடிச் சோதனை நடத்தியபோது அவர்கள் பிடிபட்டனர்.
தொற்று குறைந்து வருகிறது
புதுடெல்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சற்று குறைந்து காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 10,302 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 3,44,999,25 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 267 பேர் பலியாகினர். இதுவரை நாட்டில்
4 லட்சத்து 65 ஆயிரத்து 349 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குண மடைந்தோர் விகிதம் 98.29% உயிரிழப்பு விகிதம் 1.35%ஆக உள்ளது.

