காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு; பாஜக, ஆம் ஆத்மி கடும் கண்டனம்
புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தமது மூத்த சகோதரரைப் போன்றவர் என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்துவாராவுக்குச் சென்றிருந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து.
அவருக்கு பிரதமர் இம்ரான்கான் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்து, தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
"பிரதமர் இம்ரான்கான் என்மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். அவர் எனக்கு மூத்த சகோதரரைப் போன்றவர். கர்தார்பூர் சாஹிப் குருத்துவாரா இந்தியா, பாகிஸ்தான் இடையே புதிய நட்புறவைத் திறக்கட்டும்," என்றார் சித்து.
இம்ரான்கானை தமது சகோதரர் என்று சித்து குறிப்பிட்டதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மட்டுமல்லாமல் பாஜக, ஆத் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சித்துவின் பேச்சு இந்தியர்களுக்கு கவலை அளித்துள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
காங்கிரசார் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் நிலையில், ராகுல் காந்தி இந்துத்துவாவை விமர்சிப்பபதாகக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் பிரதமரை தமது மூத்த சகோதரர் என்று சித்து குறிப்பிடுவதைப் பார்க்கும்போது, ஏதோ மிகப்பெரிய வேலை நடப்பதாகத் தோன்றுகிறது என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தமது டுவிட்டர் பதிவில், எல்லைப் பகுதியில் வீரமரணம் அடைந்த, உயிர்த்தியாகம் செய்த இந்திய சகோதரர்களை மறக்க முடியுமா என சித்துவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
"இம்ரான் கான் யாருக்கு வேண்டுமானாலும் மூத்த சகோதரராக இருக்கட்டும். ஆனால், அவர் ஐஎஸ்ஐ, ராணுவம் மூலம் இந்தியாவுக்குள் தீவிரவாதத்தைப் பரப்புபவர்.
"பஞ்சாப், காஷ்மீருக்குள் ஆளில்லா வானூர்திகள் மூலம் ஆயுதங்கள், போதை மருந்துகளை அனுப்புகிறார் இம்ரான்," என்று மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரும், தமது டுவிட்டர் பதிவில் சித்துவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
சித்து முதலில் தனது பிள்ளைகளை நாட்டின் எல்லையைப் பாதுகாக்க அனுப்ப வேண்டும் என்றும் அதன் பிறகு வேண்டுமானால் இம்ரான் கானை மூத்த சகோதரர் என அழைக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் இந்திய வீரர்களும் கொல்லப்பட்டது குறித்து இதுவரை சித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்று காம்பீர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்தியாவைக் காக்க போராடுபவர்களை சித்து எதிர்ப்பதாகவும் இதைவிட வெட்கக்கேடான செயல் ஏதுமில்லை என்றும் காம்பீர் காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருப்பவர்கள் பாகிஸ்தானை விரும்புவதில் வியப்பு ஏதும் இல்லை என பாஜக தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.
"காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சித்துவை மிகவும் பிடிக்கும். அந்த சித்து தான் இப்போது பாகிஸ்தான் பிரதமரை மூத்த சகோதரர் என்று குறிப்பிடுகிறார். சித்து ஏற்கெனவே பாகிஸ்தான் ராணுவத் தளபதியான பஜ்வாவை கட்டியணைத்துப் புகழ்ந்தவர்," என்று அமித் மாளவியா டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர்களும் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.