ஸ்ரீநகர்: தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளியின் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 16 கோடி ரூபாயை அளித்து உதவியுள்ளது பொதுத்துறை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் சதீஷ் குமார். இவரது இரண்டு வயது மகள் சிருஷ்டி ராணி முதுகெலும்பு தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மிக அரிய வகை நோயான இதற்கு சிகிச்சை அளிக்க பெருந்தொகை செலவாகும். குறிப்பாக அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கக்கூடிய 'ஜேர்ஜென்ஸ்மா' ஊசி மருந்து சிகிச்சைக்குத் தேவைப்படும். இதன் விலை ரூ.16 கோடி ஆகும்.
இந்த நோய் தாக்கினால் முதுகுத்தண்டும் மூளையில் உள்ள நரம்புகளும் அணுக்கள் இழப்பால் பாதிக்கப்படுகின்றன. மேலும் தசைகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இது மரபணு கோளாறு என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதனால் சதீஷ்குமார் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தமது நிறுவனத்தின் மேலதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்ற அவர், தமக்கு உதவுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அவர் எதிர்பாராத வகையில், ரூ.16 கோடிக்கான காசோலையை அவரிடம் ஒப்படைத்துள்ளது சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம்.
"ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும்தான் ஒரு நிறுவனத்தின் உண்மையான செல்வம்.அவர்களுடைய உயிரைக் காப்பாற்றுவதுதான் நிறுவனத்தின் முதன்மைப் பணி. அதற்கு முன்மாதிரியாகச் செயல்பட்டுள்ளோம்," என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வரும் சிருஷ்டி ராணிக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
சிகிச்சைக்குத் தேவையான தொகை கிடைத்துவிட்டதை அடுத்து மிக விரைவில் அக்குறிப்பிட்ட ஊசி வரவழைக்கப்படும் எனத் தெரிகிறது.

