செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9447db97-a89f-4845-a48f-0f9baabe2811
-

டெல்லியில் மோசமடையும் காற்று மாசு: டீசல் கார் பயன்படுத்த அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசடைந்து வருகிறது. கடந்த எட்டு தினங்களாக காற்று தரக்குறியீடு முந்நூறைக் கடந்து பதிவாகி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் 355ஆக இருந்த காற்று தரக்குறியீடு, நேற்று 347ஆகப் பதிவானது. இதையடுத்து, அத்தியாவசியத் தேவைகளுக்கான வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் டெல்லி மாநகர் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, டெல்லியில் பத்தாண்டு களுக்கு மேல் ஆகிவிட்ட டீசல் கார்களை தொடர்ந்து இயக்கலாம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் அவற்றின் உரிமையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முன்னதாக, பத்தாண்டுகளைக் கடந்துவிட்ட டீசல் கார்களையும் 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பெட்ரோல் கார்களையும் டெல்லியில் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இன்ஸ்டகிராமில் சர்ச்சைக் கருத்து: கங்கனா மீது போலிசில் புகார்

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் நடவடிக்கையைப் போன்றது என்று நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டகிராமில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இதே போல் 'இந்தியா ஒரு ஜிஹாதிஸ்ட் தேசம்' என்றும் மற்றொரு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய இளையர் காங்கிரஸ் போலிசில் புகார் செய்துள்ளது.

இறந்ததாகக் கருதப்பட்டவர் ஏழு மணி நேரத்துக்குப் பிறகு கண் விழித்தார்

லக்னோ: இறந்துவிட்டதாகக் கருதப்பட்டவர், பிணவறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் இருந்து திடீரென கண் விழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஸ்ரீகேஷ் என்பவர் அண்மையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியதை அடுத்து, அவரது குடும்பத்தார் நேரில் வந்து அடையாளம் காட்டுவதற்காக, மருத்துவமனையின் பிணவறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் அவர் உடல் வைக்கப்பட்டது. ஏழு மணி நேரத்துக்குப் பிறகு அங்கு வந்த குடும்பத்தார் உடற்கூராய்வுக்குச் சம்மதித்தனர். அப்போது திடீரென ஸ்ரீகேஷ் உடலில் அசைவுகள் தென்பட்டன. அவர் கண்விழித்ததை அடுத்து, மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு கூம்பு வடிவ மாடங்கள்,

25 மாடிகளுடன் புதிய ரயில் நிலையம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அமைய உள்ள புதிய ரயில் நிலையம் இரு கூம்பு வடிவ மாடங்களைக் கொண்ட 25 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டடமாகக் கட்டப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இரு கூம்பு வடிவ மாடங்களும் 450 மீட்டர் நீளமும் 80 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும் என்றும் புதிய ரயில் நிலையம் ரூ.4,470 கோடி செலவில் கட்டப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

டெல்லி விமான நிலையத்துக்கு 4.5 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். எனவே, அனைத்து வசதிகளும் கொண்ட, உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் அவசியமாகிறது என இந்தியன் ரயில்வே கூறியுள்ளது.